கிழக்கு பல்கலைக்கழகம் திடீரென மூடப்பட்டதுடன் விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டதால் வெளிமாவட்ட மாணவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற முறுகலில் பொலிஸார் தலையிட்டதை கண்டித்தும் வளாகத்தில் உள்ள பொலிஸ்சாவடியை அகற்றக்கோரியும் மாணவர்களினால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் வளாக பதில் உபவேந்தர் பிரேம்குமார் தலைமையில் நடைபெற்ற அவசரக்கூட்டத்தில் கிழக்கு மாகாண படைத்தளபதி போர்னிக்ஸ் பெரேரா, ஏறாவூர் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி, பல்கலைக்கழக அபிவிருத்திக்குழுவினர், பல்கலைகழகத்தின் மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் கலந்து கொண்டூ பல்கலைக்கழகத்தில் மாணவர்களிடையே இடம்பெற்ற முறுகலில் பொலிஸார் தலையிட்டதை தொடர்ந்து இக்காவலரண் அகற்றப்படவேண்டுமென மாணவர்கள் உறுதியான கோரிக்கையினை முன்வைத்தனர். இந்த நிலையில் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கையினை காலவரையறையின்றி இடை நிறுத்துவதுடன் உள்வாரி, வெளிவாரி பரீட்சைகளையும் மறுஅறிவித்தல் வரை ஒத்திவைத்துள்ளதாக கிழக்குப்பல்கலைக்கழகத்தின் பதில் உபவேந்தர் தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பகல் 2.30க்கு முன்பாக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேருமாறு நிர்வாகமும் பொலிஸாரும் உத்திரவிட்டதன் காரணமாக வெளிமாவட்ட மாணவர்கள் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, மலையகம், அம்பாறை போன்ற மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களையும் உடனடியாக வெளியேறுமாறு பணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அப்பகுதிக்கு வந்த பொலிஸாரும் இந்த உத்தரவை விடுத்ததாகவும் இதன் காரணமாக இரவு வீதிகளில் மாணவ, மாணவிகள் பெட்டி படுக்கையுடன் நிற்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலையேற்றப்பட்டதாகவும் இது தொடர்பில் வெளிமாவட்ட மாணவர்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் இது தொடர்பில் வெளிமாவட்ட மாணவர்களை இரவு நேரத்தில் வெளியேற்றிய அம்மாணவர்களுக்கு எதுவித பிராயண ஒழுங்குகளையும் செய்யாது இவ்வாறு விரட்டுவதை வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எம்.எப்.அலா சிபாக்)