கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலையின் மாணவி ஒருவர் கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.
யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் என்பவற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நிலைமையில் தனது கல்வியை முன்னெடுத்து கல்முனை கார்மேல் பாத்திமா தேசிய பாடசாலை மாணவி செல்வி குகேந்திரன் நுஹந்தமி பாடசாலைக்கும், தமிழ் சமுதாயத்திற்கும் பெருமை சேர்த்து தந்துள்ளார்.
விஷேடமாக அம்பாறை மாவட்டத்தில் மூன்றாம் நிலை சிறுபான்மையினமாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மாவட்ட மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் கல்வி ரீதியில் சளைத்தவர்கள் அல்ல என்பதற்கு இணங்க மிக அண்மைக்காலமாக அம்பாறை மாவட்ட தமிழ் மாணவர்கள் தங்கள் திறமைகளை நிருபித்து வருகின்றனர். அந்த வகையில் செல்வி குகேந்திரன் நுஹந்தமி கடந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த. சாதாரணப் பரீட்சையில் அம்பாறை மாவட்டத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று முதலாம் நிலையில் சித்தியடைந்துள்ளார்.
ஓய்வுபெற்ற கல்முனை ரெலிக்கொம் பொறியியலாளர் தம்பிராசா குகேந்திரன் அரச மிருக வைத்தியர் திருமதி குகேந்திரன் உதயராணி ஆகியோரின் புதல்வியான செல்வி கே.நுஹந்தமி தனது இந்த வெற்றிக்காக வழிகாட்டிய அதிபர், ஆசிரியர்கள், அப்பா, அம்மா, அக்கா மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.
மேலும் இவ்மாணவிக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருந்து வாழ்த்துக்களும், பரிசுகளும் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. இவ்விடயம் குறிப்பிடத்தக்கதொன்றாகும்.
(எம்.எப்.அலா சிபாக்)