Latest News

கிழக்கு மாகாண ஆசிரியர்களி​ன் இடம்மாற்றம் குறித்து ஆர்ப்பாட்ட​ம்


அம்பாறை மாவட்டத்திலுள்ள கல்வி வலயப் பாடசாலைகளில் மேலதிகமாகவுள்ள ஆசிரியர்களை வெளி மாவட்டங்களுக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய கிழக்கு மாகாண கல்வித் திணைக்களம் எடுத்த நடவடிக்கையினை எதிர்த்தும் அவ் அடமாற்றத் திட்டத்தனை உடனடியாக கைவிடப்பட வேண்டும். என்ற கோரிக்கையை முன் வைத்து கடந்த வெள்ளிக்கிழமை கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்தில் ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்பட்டன.


கல்முனைக்குடி, சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையின் பின் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இடமாற்றம் குறித்து வெளிமாவட்டங்களுக்கு செல்லவுள்ள ஆசிரியர்களின் பெற்றோர்கள், பாடசாலைகளின் நலன் விரும்பிகள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


மேலும் சாய்ந்தமருதில் ஆசிரியர்களின் இடமாற்றத்தினை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத், கல்முனை மாநகர சபையின் உதவித் தவிசாளர் ஏ.ஏ.பசீர் மற்றும் பல கல்விமான்களும் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சாய்ந்தமருது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட பிரதித் தலைவரும், முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாண சபையின் உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீதிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கருத்துத் தெரிவிக்கையில்ளூ இந்த ஆசிரியர்களின் இடமாற்றம் பற்றிய நடவடிக்கை சடுதியாக அமுல் படுத்தியதால் இச்செயலினை ஏற்றுக் கொள்ள முடியாததும், கண்டிக்கத்தக்க விடயமுமாகும். இத்திட்டத்தினை உடன் கைவிடப்பட வேண்டும்.


அம்பாறை மாவட்டத்திலிருந்து இந்த இடமாற்றத் திட்டத்தின் கீழ் தெரிவான 80 வீதமான ஆசிரியர்கள் பெண்கள். குறிப்பாக கர்ப்பினிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், தாய் தந்தையர்களுடன் தங்கி வாழும் பெண்கள், சுகயீனமுற்ற நிலைமையிலுள்ள தாய் தந்தையர்ககளை கவனிக்கும் பெண்கள் போன்றோர்களுக்கே வெளிமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


இந்த இடமாற்றத்தை ஆகக் குறைந்தது இவ்வருட இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் வரையாவது பிற்போடப்பட வேண்டும். இலங்கையில் ஏனைய மாகாணங்களில் மேலதிக ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர். அதில் மத்திய மாகாணத்தில் சுமார் 2 ஆயிரம் பேரும், மேல் மாகாணத்தில் சுமார் 4 ஆயிரம் பேரும் இருக்கின்ற நிலைமையினை எவரும் கண்டு கொள்ளாமல் கிழக்கில் மட்டும் ஏன்? இந்த அவசரமான இடமாற்றத்திட்டத்தினை எடுக்க வேண்டும்.


கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் மட்டும் மேலதிக ஆசிரியர்களை இடமாற்றும் விடயத்தில் மிக அவசரமாகவும், விடாப்பிடியாகவும் செயல்பட்டு நிற்பது ஏன் என்பது புரியாமல் உள்ளது. இவர் எடுத்த முடிவுக்கு கிழக்கில் உள்ள நாம் என்ன பலிக்கடாக்களா? இல்லை நம்மவர்களே இதற்குத் துணை போவதா? அவரின் விடாப்பிடியான அவசரச் செயலினை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. எனத் தெரிவித்தார்.


விஷேடமாக இந்த மேலதிக ஆசிரியர் இடமாற்ற விவகாரம் அம்பாறை மாவட்டத்திலே மிக மிக அதிகளவில் உக்கிரமடைந்து காணப்படுகின்றது.
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
Tags:

About author

Curabitur at est vel odio aliquam fermentum in vel tortor. Aliquam eget laoreet metus. Quisque auctor dolor fermentum nisi imperdiet vel placerat purus convallis.