அம்பாறை மாவட்ட இளைஞர், யுவதிகளின் நலன் கருதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் சுமார் 3 கோடி 25 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையங்கள் இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவினால் கடந்த வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேச கடற்கரை வீதியில் சுமார் 2 கோடி 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இளைஞர் நிலையம் மற்றும் இளைஞர் சேவைகள் திணைக்கள மாகாண காரியாலயமும், பதியத்தலாவ பிரதேசத்தில் சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையம் என்பன அமைச்சர் டளஸ் அழகப் பெருமவினால் திறந்து வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் திகாமடுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரிஸ், பொ.பியசேன, சிரியாணி குலவன்ச, கிழக்கு மாகாண சபை அமைச்சர் துரையப்பா நவரட்ணராஜா, சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.நௌசாட், தேசிய இளைஞர் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும் தலைவருமான லலித் பியும் பெரேரா, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.சீ.எம்.சலீம், அம்பாறை மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். (எம்.ஐ.முஹம்மட் பைஷல்)