
அம்பாறை மாவட்டம் முழுநாட்டினதும் இன ஐக்கியத்தை வெளிப்படுத்தும் ஒரு விசேடமான மாவட்டமாகும். இம்மாவட்டத்தின் சிங்களப் பிரதேசத்திலிருந்து தமிழ்,முஸ்லிம் மக்கள் வாழும் கரையோரப் பிரதேசத்திற்கு நீர் வழங்கப்படுவதிலிருந்து இந்த இன ஐக்கியத்தை உணரலாம்.இவ்வாறு நீர்ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தின் வெள்ளம் காரணமாக சேதமடைந்த குளங்கள் மற்றும் அணைகளின் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிடுவதற்காக விஜயம் செய்த அமைச்சர் அம்பாறை கச்சேரியில் இடம்பெற்ற விவசாயிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் சந்திப்பில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; நாம் ஒவ்வொரு தரப்பினரும் வெவ்வேறாக பிரிந்து நிற்காமல் இந்நீர் முகாமைத்துவ அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் போது இம்மாவட்டத்தின் சகல பிரதேசத்தையும் ஒன்றென நினைத்தே மேற்கொள்ள வேண்டும். கரையோர மாவட்டம் மற்ற பிரதேசம் என்று வேறுபடுத்த முடியாது. நீர்ப் பிரச்சினையில் அனைவரும் ஒற்றுமைப்பட வேண்டும். அப்போதுதான் இக்கடமையினை சரியாக செய்ய முடியும். எமது அமைச்சு சகலரையும் ஒன்றாகவே கருதுகின்றது. முஸ்லிம் மக்கள் வாழும் பகுதிக்கு விரைவாக வேலை செய்ய வேண்டுமென்றால் நாம் இப்பகுதியை மறந்து அப்பகுதி வேலையினை துரிதப்படுத்துவோம்.
சிங்களப் பகுதி வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டுமானால் கரையோரத்தை மறந்து அதனைச் செய்வோம். தமிழ்ப் பகுதிக்கும் அவ்வாறுதான் அதுதான் எமது கொள்கை.நான் பலதடவை அம்பாறைக்கு விஜயம் செய்துள்ளதால் எனக்குத் தெரியும் என்ன செய்ய வேண்டும் என்று இங்குள்ள பிரச்சினைகளையும் நான் இனங்கண்டுள்ளேன். இம்மாவட்டம் சிறப்பாக செயற்படும் மாவட்டம். இங்கு பிரச்சினைகள் குறைவு. அநேகமான பிரச்சினைகளுக்கு நாம் தீர்வு பெற்றுக் கொடுத்துள்ளோம்.
நான் இங்கு வரும்போது நினைத்தேன் மக்கள் கல்லு பொல்லுகளுடன் வந்து அதைச் செய்யவில்லை இதைச் செய்யவில்லையென்று கூறுவார்கள் என்று. ஆனால் இங்கு எல்லாமே செய்யப்பட்டு விட்டது. நீங்கள் சில அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கும் போது அவைகளை நாம் செய்து தரவேண்டும். எனவே தற்போது ஒப்படைக்கப்பட்டுள்ள வேலைகளை சரியாகச் செய்யவேண்டும். அம்பாறை மாவட்டத்தில் சேதமடைந்த சிறு மற்றும் பாரிய நீர்ப்பாசனக் குளங்களை கவனத்திலெடுத்து அவைகளை திருத்த வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் கிழக்கு மாகாண சபை அமைச்சர் எம்.எஸ்.உதுமா லெப்பை, எம்.ஐ.நௌஷாட், பாராளுமன்ற உறுப்பினர் சிறியானி விஜேவிக்கிரம உட்பட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்
( எம்.எப்.அலா சிபாக் )